Mar 11, 2010

பேருந்தில்...

ஒரு மாலை வேளையில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பேருந்தில் பயணம் செய்யும் வேளையிலெல்லாம் பெரும்பாலும் நின்று கொண்டே பயணம் செய்வது என் வழக்கம். பல கற்பனைகள் என் நினைவெல்லாம் பொங்கி பெருகுவது பெரும்பாலும் பயணம் செய்யும் வேளைகளில் தான்.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன் நான் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தேன். பின் வாசல் அருகில் நான் நின்று கொண்டிருந்தேன். எனக்கு முன்பாக வலது பக்கத்தில் மூன்று பேர் அமரும் இருக்கையில் ஒரு நடுத்தர வயது பெண்மணியும் அவள் அருகில் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் ஜன்னல் ஓரம் ஒரு சிறுவனும் அமர்ந்திருந்தனர். அவர்களது நடவடிக்கை பார்க்கும் பொழுது அம்மா இரண்டாவது மகள் மூத்த மகளின் குழந்தை என தெரிய வந்தது. அக்குழந்தையின் அம்மா பேருந்தின் முன் பக்கம் இருப்பது பயணச்சீட்டு வாங்கும் பொழுது தெரிந்தது.

இந்த மூவர் இருக்கைக்கு எதிர் புறம் இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒரு காவலர் உடன் ஒரு குற்றவாழியுடன் அமர்திருந்தார். நீதிமன்றம் கூட்டி செல்வதற்காக கையில் விலங்குடன் குற்றவாழியை அமர வைத்திருந்தார்.

என் பார்வையெல்லாம் அச்சிறுவன் மேல் இருந்தது. அச்சிறுவனுக்கு தன் தாயுடன் செல்லவேண்டும் என்ற எண்ணம். அதனால் தன் சித்தி பாட்டியை கடந்து வர முயல்கிறான். ஆனால் அதன் அருகில் இருக்கும் காவலரை தாண்டி செல்ல அவனுக்கு பயமாக இருக்கிறது. அதனால் கொஞ்ச நேரம் அழுது அடம்பிடித்தான். பின் கையை வெளியே நீட்டுவது இருக்கையின் மேல் எழுந்து நிற்பது குதிப்பது என சேட்டைகள் செய்கின்றான். ஆனாலும் அவன் முகத்தில் சந்தோசம் கொஞ்சம் கூட இல்லை.

அவனை பொருத்தவரை அந்த இருக்கை ஒரு சிறைச்சாலை போலவும் அதில் இருந்து விடுதலை பெற முயற்சி செய்வது போலவும் அவன் செய்கைகள் இருந்தது. அவனது மனஓட்டத்தை புரிந்துகொள்ள எவரும் முயற்சி செய்ய வில்லை. அவனை திட்டுவதும் மிரட்டுவதுமாக அவனது சித்தி இருந்தாள்.

சுமார் அரை மணி நேரமாக அவனது போராட்டத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன். தன்னால் முடிந்தவரை போராடினான். ஆனாலும் அவனது போராட்டத்தை புரிந்து கொள்ளும் சக்தி அவர்களிடத்தில் இல்லை. பின்னர் அவனிடம் எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை. மிகவும் அமைதியாக காணப்பட்டான்.

அவன் முகத்தை பார்த்தேன். அதில் காணப்பட்ட வெறுப்பு மிகவும் அதிகமாக இரு்தது. அந்த நிமிடத்தில் அவன் தன்னை புரிந்து கொள்ளாத தன் பாட்டி சித்தி மற்றும் தன் மகன் இப்படி ஒரு போராட்டத்தில் இருப்பானா? என சிந்தித்துப்பார்க்க கூட நேரமில்லாத தன் தாய் என அனைவர் மேலும் அவன் கொண்ட வெறுப்பு மற்றும் இவர்களிடமிருந்து தன்னால் தப்பிக்க முடியவில்லையே என்ன இயலாமை காவலரை பார்க்கும் பயம் கலந்த வெறுப்பு இவை அனைத்தையும் அவன் முகத்தில் பிரதிபலித்தான்.
அந்த முகம் இன்னும் என் கண்களில் தெரிகிறது.

No comments: