Mar 25, 2020

கங்கையும் காவேரியும்


அமுதா..
ஏய் அமுதா..
என வாசலில் நின்று தன் தோழி அமுதாவை அழைத்தாள் வனஜா..

அமுதா கிளம்பிட்டியா.. உன் பிரண்ட் கிளம்பி நம் வீட்டுக்கே வந்திட்டா பாரு.. என்ன பிள்ளைகளோ.. ஒத்தாசையா ஒரு வேலையும் பார்ப்தில்லை.. அப்படியிருந்து ஒரு பக்கம் கிளம்ப இவ்வளவு நேரமாகுது... என்று சலித்துக்கொண்டார் அமுதாவின் அப்பா கிருஷ்ணமூர்த்தி.

இதோ வந்திட்டேன்.. அப்பா கோச்சிங் கிளாஸ் போயிட்டு வர்றேன்.. அம்மா நான் போயிட்டு வர்றேன் என்ற சத்தத்திலே வாசலை அடைந்தாள் அமுதா..

இருவரும் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்..

சில நிமிட அமைதிக்கு பிறகு வனஜா பேச்சை தொடங்கினாள்.. என்னடி இந்த வாரம் முதலில் இருந்தே டல்லா இருக்க.. என்னடி பிரச்சனை என்றாள்..

ஒண்ணுமில்லையே.. நான் எப்போதும் போலதான இருக்கிறேன் என சுரத்தையே இல்லாமல் பதிலளித்தாள் அமுதா..

பொய் சொல்லாதடி அதான் உன் முகமே காட்டி கொடுக்குதே.. இது வனஜா..

கணநேர அமைதிக்கு பிறகு அமுதாவே ஆரம்பித்தாள்..
போன ஞாயிற்றுக்கிழமை ஸ்டுடியோவுக்கு கூட்டிட்டு போய் போட்டோ எடுத்தாங்க.. வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கனு தெரியுது.. அதான் ஒரே குழப்பமா இருக்குடி..
 
ஏன் உனக்கு யாரையாவது பிடிச்சிருக்கா.. பிடிச்சிருந்தா நேரா வீட்டில் சொல்லிடலாம்ல.. அவங்களுக்கும் மாப்பிள்ளை தேடுற அலைச்சல் இருக்காதுல்ல..

நீவேற இன்னும் கல்யாணமே ஆகலையாம் அதற்குள்ள பொறக்கபோற குழந்தைக்கு என்ன பேரு வைக்கலாம்னு யோசிக்கிற மாதிரி சொல்லிட்டு இருக்கிற..

இப்படி இருவரும் பேசிக்கொண்டு பேருந்து நிறுத்தத்தை அடையவும் மினி பஸ் வந்து சேரவும் சரியாக இருந்தது.. பஸ்சை கண்டதும் வேகமாக நடக்க எத்தனித்தனர்.. ஆனால் டிரைவரே இவர்கள் அருகே வண்டியை ஸ்லோ பண்ண இருவரும் ஏறி டிரைவருக்கு பின்னாடி உள்ள சீட்டில் அமர்ந்து கொண்டனர்..

அமுதாவின் முகத்தில் அவள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் தெரிந்தது. அதனால் வனஜா அவளை தொந்தரவு செய்ய விரும்பாமல் அமைதி காத்தாள். ஆனாலும் அவளுக்கு மனம் இருப்பு கொள்ளவில்லை. அமுதாவோடு பள்ளிகாலம் தொட்டே ஒன்றாக படிப்பவள்.
 
தனக்கு தெரிந்து அமுதா யாரையும் இதுவரை காதலித்திருக்க வாய்ப்பு இல்லை. எப்படியாவது ஏதாவது ஒரு தேர்வில் பாஸாகி நல்லதா ஒரு வேலையில் சேர்ந்திட வேண்டும் என்பதுதான் அவளது எதிர்கால கனவு.. கல்யாணம் அதற்கு தடையா இருக்கும் என நினைக்கிறாளோ என்னவோ என்று எண்ணியவாறே இவளும் அமைதியானாள். 
 
நடத்துனர் அருகில் வந்து எங்கே போகவேண்டும் என்று கேட்காமலே இரண்டு டிக்கெட்டை கிழித்து கொடுத்தார். சரியாக எண்ணி வைத்த சில்லறையை கொடுத்துவிட்டு டிக்கெட்டை பத்திரப்படுத்திக் கொண்டாள் வனஜா..

என்னடி சீக்கிரம் கல்யாணம் ஆகப்போகுதே.. இனி எதற்கு அகடமி எக்ஸாம்னு நினைக்கிறியா என்று அமைதியை குலைத்தாள் அமுதா..

அவளது கேலியை ரசிக்கும் வண்ணம் மெலிதாக சிரித்துவைத்தாள் அமுதா..

ஏய்.. என்னதான்டி உன் பிரச்சனை.. வாயதொறந்து சொன்னா தான்டி தெரியும்.. என்று கொஞ்சம் கோபத்தை கூட்டினாள் வனஜா..

ஒண்ணும் இல்லடி.. இப்போதைய என் வீட்டு சூழல்.. என் கல்யாண பேச்சி.. எனக்கு எதிர்பார்ப்பை விட குழப்பம் தான் அதிகமாக இருக்கு..

என்னடி சொல்ல வர்ற..

ரிட்டையர்டு ஆன அப்பா, வீட்டோட அம்மா, கட்சி சங்கம்னு சுற்றி திரியிற அண்ணன், தினசரி செலவிற்கே திண்டாடும் குடும்பம் என்ன தைரியத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறாங்கனு தெரியல..

அதுக்காக அப்படியே விட்டிட முடியுமா..

அப்படினா பாழுங்கிணத்தில தான தள்ளிவிடுவாங்க..

இப்படி தொடர்ந்த விவாதத்தில் தன் தோழியின் நிலையை ஓரளவு யூகித்தாள் வனஜா.. இது குறித்து விரிவாக பேச இது சரியான இடம் இல்லை என்று அமைதியானாள்..

பேரூந்தில் இருந்து இறங்கி அகடமி செல்லும் வரையில் இருவருமே அமைதியை தொடர்ந்தனர். கோச்சிங் வகுப்பில் மும்முரமான இருவரும் பின் மதிய உணவு வேளையில் தான் சந்திக்க முடிந்தது..

சொல்லு டி நீ யாரையாவது விரும்புகிறாயா... நேராகவே கேட்டாள் வனஜா..
 
அதுக்கெல்லாம் தைரியம் வேணும்டி.. அமுதாவிடம் இருந்து சுரத்தையே இல்லாமல் பதில் வந்தது.

இங்கே பாரு அமுதா.. உன் மனதில் ஏதோ ஒரு குழப்பம் கிடந்து உன்னை பாடாய்படுத்து.. அதை என்னன்னு யாரிடமாவது சொன்னால் தான் தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ உன் மனம் தெளிவடையும்.. என்னை உனது உற்ற தோழியாய்.. உனக்காக வருந்தும் ஒரு ஜீவனாய் நீ நம்பினாய் என்றால் தயவுசெய்து சொல்.. உனக்கு என்னதான் பிரச்சனை.. என்று படபடவென்று பொரிந்து தள்ளினாள் வனஜா..

ஒருநிமிடம் கண்ணை மூடி நிதானித்தவள் பின் மெதுவாக வனஜாவை நோக்கினாள்..

உனது வருங்கால கணவனை பற்றி நீ எப்போதாவது சிந்தித்திருக்கிறாயா..நீ உன் வருங்கால வாழ்க்கையை பற்றி என ஏதோ சொல்ல வாயெடுத்த அமுதா... அப்படியே நிறுத்தி விட்டு அந்த நேரம் சாலையில் சென்ற ஒரு காரை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். 

அதைக்கண்டு சற்றே திகைத்த வனஜாவும் அந்த காரை பார்த்தாள்.. 

//அது தங்களோடு படித்த ராஜாவின் கார். பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்தவன். படிப்பில் அமுதாவிற்கும் ராஜாவுக்கும் யார் பெரியவர்கள் என்ற சண்டை ஆரம்பகாலத்தில் வந்ததுண்டு. ஆனால் மேல் வகுப்பிற்கு வந்த போது ராஜா படிப்பில் அவ்வளவு அக்கறை கொண்டதில்லை.. அவனோடு படித்த பலர் வேலை தேடி கோச்சிங் என்று திரியும் போது அவன் அவனது தந்தையின் மளிகை கடையில் போய் இருந்து கொண்டான். இன்று அது சூப்பர் மார்க்கெட் ஆக உயர்ந்து நிற்கிறது என்றால் அதில் ராஜாவின் பங்களிப்பு அதிகம்.. //

அமுதா காரை பார்க்கும் ஆர்வத்தை கண்டு வியந்த வனஜா.. ஏதோ பொறி தட்டியவளாக பேச்சை தொடர்ந்தாள்..

சொல்லு அமுதா ராஜாவை பற்றி என்ன நினைக்கிற? என்ற வனஜாவின் கேள்வியில் திடுக்கிட்ட அமுதா சொல்ல வார்த்தை இன்றி முழித்தாள்..

என்னடி எதுவும் பேச மாட்டேங்குற ஒன் சைடா இல்ல டபுள் சைடா.. என வனஜா சற்றே கேலியாக கேட்டாள்..

ஏய் என்னடி உளர்ற என கடிந்து கொண்டாள் அமுதா..

ஏய் பொய் சொல்லாதடி எனக்கும் உன் வயசு தான்.. மோச புடிக்கிற நாய் மூஞ்சப் பார்த்தா தெரியாதா.. சொல்லுடி எனக்கு தெரியாமல் இன்னும் என்னென்ன பண்ற.. எங்கெயெல்லாம் போயிருக்க என சற்றே ஆர்வத்தோடு வனஜா பேச்சை தொடர்ந்தாள்..

ஏய்.... நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லடி.. ஆரம்பத்தில் நாங்கள் சண்டை போட்டதுண்டு. அதன் பின் பெரிதாக அவனோடு எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் கல்லூரி முதல் வருடம் செமஸ்டர் தேர்வின் போது நான் மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்த ஹால்டிக்கெட்டை எங்கள் வீட்டுக்கு போய் வாங்கி வந்து குடுத்த பின் எதிரில் கண்டால் பேசிக்கொள்வதுண்டு.
 
இறுதி தேர்வின் போது எக்ஸாம் பீஸ் கட்ட பணமில்லாமல் நான் திணறிய போது அவனாக முன்வந்து பணம் தந்து உதவினான். அதை பற்றி யாரிடம் பேசுவதோ, அதனை வைத்து அதிக உரிமை எடுத்து பேசியதோ இல்லை.. அந்த கேரக்டர் எனக்கு பிடிச்சிருந்தது..
 
எதிர்காலத்தில் இதுபோன்ற ஒருவன் நமக்கு லைஃப் பார்ட்னரா அமைந்தா லைஃப் நல்லா இருக்கும் என நினைத்ததுண்டு. ஆனால் அவனையே கல்யாணம் செய்யணும் என்று எல்லாம் நினைத்ததில்ல.. 
 
யாராவது கையில் வெண்ணெய்யை வச்சிட்டு நெய்க்கு அலைவாங்களாடி.. இவனை மாதிரி ஒருத்தன எங்கே தேடுறது.. பிடிச்சிருந்தா நேரா அவனிடமே கேட்டிற வேண்டிய தானடி.. என்று படபடத்தாள் வனஜா.. 

ஏய்.. இதெல்லாம் நடக்கிற காரியமாடி.. அவன் எங்கே நான் எங்கே.. எதுக்குடி தேவையில்லாத ரிஸ்க் எடுத்திட்டு.. வீட்டில் பார்க்கிற மாப்பிள்ளையில் அந்த கேரக்டர தேடிக்கலாம்டி.. என்றாள் அமுதா..

 நான் ஒண்ணு சொல்றேன் கேளு.. எப்படி நீ அவனை தூரத்தில் பார்த்து காதலிச்சிட்டு இருந்தியோ அதே மாதிரி அவனும் உன்னை தூரத்தில் பார்த்தே காதலிச்சிட்டு இருந்தான்னா?  யாராவது ஒருத்தர் நேருக்கு நேராக கேட்டால் தானடி உண்மை என்னனு தெரியும்.. இப்படி கண்டுக்காம காதலிக்கிறது ரூபாய் நோட்டில் காதலிக்கிறது எல்லாம் சினிமாவுக்கு வேணா நல்லா இருக்கும் டி.. ஆனால் நிஜத்தில் கண்டுக்காம இருந்தா கடைசியில் காணமல் தான் போவோம்..
என்று பொரிந்து தள்ளினாள் வனஜா..
தோழியின் பேச்சால் அமுதா குழம்புவது முகத்தில் தெரிந்தது..

சரிடி.. நடந்தது நடந்து போச்சு.. ஒரே ஒரு முறை ராஜாவை நேரில் போய் பாரு.. அதன் பிறகு எப்படி வேணா நடக்கட்டும்.. ஆனால் இப்ப பார்க்காமல் பின்னாளில் ஒருவேளை அன்று போய் பார்த்திருந்தா என்ற எண்ணம் வந்து கஷ்டப்படுத்தக்கூடாது.. அதனால் தயவுசெய்து ஒரே ஒரு முறை அவனை நேரில் போய் பாருடி... என்று முடித்தாள் வனஜா..


அன்று இரவில் நெடுநேரத்திற்கு அமுதாவிற்கு தூக்கம் வரவில்லை.. எத்தனை புரண்டு படுத்தும் அன்றை பகலில் நடந்த உரையாடலே கண்முன்னே வந்து நின்றது.. நம்மைப் போலவே ராஜாவிற்கும் நம்மீது ஒரு ஈர்ப்பு இருந்து அவனும் கடைசி வரை வெளிக்காட்டாமலே இருந்துவிட்டால்... என்ற எண்ணமே அவளுக்கு மிகுந்த வலியை தந்தது..
 
ஒரு வழியாக பின்னிரவில் உறங்கிப்போனாள். உறங்கிய பின்னும் ஒரு வயோதிக குடிகார மாப்பிள்ளை தன்னை பெண் பார்க்க வருவது போலவும்.. தன் தந்தையும் வரதட்சணை அதிகம் கேட்கவில்லை என்பதால் அந்த வரனையே முடித்துவிடுவது என்றும் யோசிப்பதாகவும் கனவு கண்டு திடுக்கிட்டு விழித்தாள்.. பின் கண்கள் இரண்டும் ஒன்றையொன்று சேருவதாக தெரியவில்லை.. 

என்ன நடந்தாலும் சரி இன்று ராஜாவை நேரில் பார்த்து விடுவது என்று எண்ணியவள்.. என்னமா எட்டு மணி வரைக்கும் உறக்கம் என்ற தந்தையின் குரலை கேட்டு உறக்கம் கலைந்து எழுந்தாள்.

வழக்கம் போல் வீடுதேடி கூப்பிட வந்த வனஜாவோடு பஸ் ஸ்டாப் வரை வந்துவிட்டு.. நீ ஆகாடமிக்கு போ வனஜா.. நான் இன்று ராஜாவை அவனது ஆபிஸில் சென்று பார்த்து விட்டு வந்துவிடுகிறேன் என்றாள் அமுதா..

அவளது குரலில் இருக்கும் உறுதியை கண்ட வனஜா மிகுந்த சந்தோஷம் கொண்டாள். கூடவே எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் ஆண்டவா என மனதார வேண்டிய படி தோழியை வழியனுப்பி வைத்தாள்..

பிரம்மாண்டமான கட்டிடம். கீழ் தளம் மட்டும் வேலை முடிந்திருந்தது.. அதற்கு மேல் தளங்களில் எல்லாம் கார்பென்டர்களும் பெயிண்டர்களும் மும்முரமாக தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். கீழ்தளத்தின் முகப்பில் ரிசப்ஷனிஸ்ட் போல தோற்றமளித்த நபரிடம் என் பெயர் அமுதா, உங்கள் முதலாளியின் பள்ளி தோழி, அவரை பார்க்க வேண்டும் என்று சொன்னாள்.
 
 ஓணருக்கு போன் செய்து தகவல் தந்து விட்டு நேராக சென்று வலது பக்கம் இருக்கும் ரூம்மிற்கு செல்லுங்கள் அவர் அங்கேதான் இருக்கிறார் என்று சொல்லியபடியே அடுத்து வந்த போன் காலில் மூழ்கினார் அந்த நபர்.. 
 
அவர் சொன்ன திசையில் சென்று கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள். காரசாமாக போனில் யாரிடமோ சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருந்தவன் அமுதாவை பார்த்தவுடன் .. நான் அப்புறம் பேசிறேன். வையுங்கள் என்று கூறிவிட்டு.. அமுதாவை பார்த்து புன்னகைத்தபடி நாற்காலியில் அமரும்படி செய்கை செய்தான்..

அமுதா தன்னை தேடி ஆபிஸ் க்கே வந்திருக்கிறாள் என்பதை ராஜாவால் நம்ப முடியவில்லை..

கல்லூரி நாட்களில் ஆரம்பத்தில் ஏற்பட்ட மோதல்.. பின்னர் ஹால்டிக்கெட், எக்ஸாம் பீஸ் என நெருங்கி.. முதன்முதலில் போன் வாங்கியவுடன் ஹாய் ஹலோவில் ஆரம்பித்த பழக்கம் பின்னர் ஒரு நாளின் 86400 நொடிகளிலும் என்ன நடந்தாலும்  இருவரும் ஷேர் செய்வது என தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது. இனி புதிதாக ஒரு நொடி கிடைக்காது என்று நினைத்தார்களோ இல்லை தொழில் வேலை தேடும் முயற்சி என தங்கள் கவனம் வேறு திசையில் சென்றதாலோ கொஞ்சம் கொஞ்மாக போனில் பேசுவது குறைந்து இப்போது ஏதாவது நல்ல நாளுக்கு வாழ்த்துக்கள் சொல்வதோடு நின்றுபோனது.
இன்று எதற்காக தன்னை தேடி ஆபிஸ் க்கே வந்திருக்கிறாள் என்று ராஜாவால் ஜட்ஜ் பண்ண முடியவில்லை. இடையே வந்த இரண்டு போன் கால்களையும் கட் செய்து விட்டு அமுதா, காபியா டீயா என்று கேட்டு விட்டு சற்று தொலைவில் மேஜையில் இருந்த பெரியவரை நோக்கி பட்டு அண்ணே இரண்டு டீ கொண்டு வரச்சொல்லுங்கள் என்று சைகை செய்தபடி அமுதாவின் அருகில் வந்து அமர்ந்தான்.

அமுதா கொஞ்சம் தமங்கியபடியே தொலைவில் இருந்த பெரியவரை திரும்பி திரும்பி பார்த்தாள். அமுதா நீ எதுவானாலும் தயங்காமல் கேள். அவர்  பட்டு அண்ணன். எங்கள் அப்பா மளிகை கடை வைத்திருக்கும் போது அருகில் சைவ மெஸ் வைத்து நடத்தியவர். அப்பாவிற்கு ரொம்ப தோஸ்த். தொழிலில் நஷ்டம். தொடர்ந்து நடத்த முடியாததால் இப்ப அப்பாவிடம் கணக்கு பிள்ளையாக இருக்கிறார்.  அவரால் எந்த பிரச்சனையும் கிடையாது. அதுமட்டுமின்றி அவருக்கு காதும் சரியாக கேட்காது. அதனால் நீ சொல்ல வந்ததை எந்த தயக்கமும் இன்றி சொல்லலாம்.. என்று கூறி முடித்தான் ராஜா..

சற்றே தைரியம் பெற்றவளாக அமுதா "ராஜா நாம கல்யாணம் பண்ணிக்கலாமா" என நேராகவே கேட்டேவிட்டாள்.. ஆயிரம் தேவதைகள் காதிற்குள் வந்து
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன் பாடலை பாடுவதை போல உணர்ந்தான் ராஜா. இடையில் வந்த ஒரு போன் காலில் சுய நினைவிற்கு வந்தவன் அமுதாவை ஆச்சரியத்தோடு பார்த்தான்..

தப்பா எடுத்துக்காத ராஜா.. என் அப்பா அண்ணன விட நான் அதிகமா பேசி பழகியதுன்னா அது உன்னிடம் தான்.. மணிக்கணக்கில் உன்னோடு பேசி கழித்த பொழுதுகளில் வராத இனம்புரியாத கலக்கம் இன்று வீட்டில் வரன் பார்க்க துவங்கியவுடன் ஏற்படுகிறது. எனக்கே தெரியாமல் உன்னை காதலித்து இருக்கிறேன் என்று புரிகிறது.. இன்று உன்னிடம் இதை சொல்லவில்லை என்றால் இனி என்றுமே சொல்ல முடியாது என்று மனம் எனை துரத்துகிறது. அதற்கு முன் என்னைப்பற்றி நீ என்ன நினைக்கிற என்பதை அறிய விரும்பினேன்..  அதனால் இன்று உன்னை தேடி வந்தேன்.. என அவன் சொல்ல போகும் பதிலை எதிர்பார்த்து அவனது முகத்தை நேராக பார்த்தாள் அமுதா.

அமுதா.. நாம் கல்லூரி முடித்த தருணத்தில் மட்டும் இந்த வார்த்தையை சொல்லியிருந்தால் உடனே ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று தாலியை கட்டி நேராக வீட்டிற்கு சென்று என் அப்பா காலில் விழுந்திருப்பேன். ஏன்னா அப்போது நான் உன் மீது அவ்வளவு பைத்தியமாக திரிந்தேன். 24 மணி நேரமும் போனோடு திரிந்த என்னை கவனித்த என் மாமா என்னிடம் பேச துவங்கினார். உன்னை பற்றி விசாரித்தார். அதன் பின் " ராஜா, இந்த வயதில் ஒரு ஆணுக்கு பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதோ ஈர்ப்பு வருவதில் எந்த வியப்பும் இல்லை. இது மனித இயல்பு தான். ஆனால் திருமணம் செய்வதற்கு இது சரியான தருணமும் இல்லை வயதும் இல்லை. முதலில் நம் வீட்டு சூழலை பார். உன் தாத்தா பதனீர் இறக்கிய காடு கழனிகளை எல்லாம் விற்றுவிட்டு உன் அப்பா மளிகை கடை வைத்திருக்கிறார். அதிலும் சொல்லும்படி பெரிய வருமானம் இல்லை. அவர்கள் வீட்டை பொருத்தவரை அவளுடைய அப்பா ஓய்வுபெற்ற அரசு ஊழியர்.. அவ தாத்தா பெரிய கோவிலில் அர்ச்சகராக இருந்தவர். அவர் அர்ச்சகராக இருந்த காலத்தில் உன் தாத்தாவுக்கு அந்த கோவிலுக்குள் நுழைய கூட அனுமதி இருந்திருக்காது. ஆனால் நீ அந்த வீட்டிற்கு மருமகனாக நுழைய விரும்புகிறாய். இதை நிச்சயம் அவர்கள் விரும்ப மாட்டார்கள். அந்த பெண் விரும்பினாள் என இப்போது நீ காதல் திருமணம் செய்தாலும் அவர்கள் உன்னை ஏற்க மாட்டார்கள். உன் தந்தையின் நிலையும் அதுவாகத்தான் இருக்கும். அப்படி இரண்டு பக்க ஆதரவும் இல்லாமல் இந்த வயதில் திருமணம் செய்து நிலையான வருமானம் எதுவும் இல்லாமல் உங்களால் ஆறு மாதம் கூட சந்தோஷமாக குடும்பம் நடத்த முடியாது. உங்களுக்குள் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வாழ்க்கைக்கையே சூன்யமாக தோன்றும்.. அதனால் உன் காதலை கொஞ்ச நாள் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு உன் எதிர்கால வாழ்க்கையை கவனி. வாழ்வில் நீ சொந்தகாலில் நிற்க துவங்கினால் நிச்சயமாக இந்த சமுதாயம் உன்னை மரியாதையாக ஏற்க துவங்கும்" என்றார்.

எனக்கும் அவர் சொல்வது சரியாக பட்டது. முதலில் வேலை தேட துவங்கினேன். அதைவிட என் தந்தையோடு இணைந்து அவரது தொழிலை உயர்த்தினால் அவரிடம் நல்ல பெயரை சம்பாதிக்க முடியும் என்று எண்ணினேன். இன்று அவரது மளிகை கடை டிபார்ட்மென்டல் ஸ்டோராக உயர்ந்து நிற்கிறது. அதன் தொடர்ச்சியாக விரைவில் ஜவுளிக்கடை திறக்க போகிறோம். இப்போது மும்முரமாக வேலை நடக்கும் இந்த கட்டிடபணிகள் ஜவுளிக்கடைக்கானதே. நான் நம்புகிறேன் இனி எனது விருப்பத்திற்கு என் தந்தை மறுப்பு தெரிவிக்க மாட்டார் என..

 இதேபோன்ற நிலை உன் வீட்டில் உனக்கும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே உன்னையும் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடச் சொல்லி உன்னை அடிக்கடி வலியுறுத்தினேன். கோச்சிங் போ.. குருப் தேர்வு எழுது என உன்னை விரட்டியதற்கு காரணமும் அதுதான். வீட்டில் இருக்கும் பெண்களை விட வேலைக்கு போகும் பெண்களின் குரலுக்கு வீட்டில் மரியாதை இருக்கும் என்று நம்பினேன். தேர்வில் கவனம் செலுத்தவதை கெடுக்க கூடாது என்று தான் போனில் பேசுவதையும் குறைத்து கொண்டேன். இதுவரை உனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்த முறை 10% இட ஒதுக்கீடு இருப்பதால் நிச்சயமாக உனக்கு வேலை கிடைத்துவிடும் என்று நம்புகிறேன். நிச்சயமாக நம் எதிர்காலம் நன்றாக இருக்கும். விரைவில் இதுபற்றி என் வீட்டில் பேசுகிறேன். நீ எதை பற்றியும் கவலைப்படாமல் உன் தேர்வுகளில் கவனம் செலுத்து அமுதா .. என ஒரே மூச்சில் பேசி முடித்தான் ராஜா..

அமுதாவிற்கு ஒரு திரைப்படத்தை கண்முன்னால் பார்த்ததை போன்ற ஒரு பிரமிப்பு. காலை வரை இருந்த குழப்பம் எல்லாம் காணாமல் போயிடிச்சி.. இனி என்ன வந்தாலும் இவன் நம்மை நிச்சயம் கைபிடிப்பான் என்ற நம்பிக்கை வந்தது. மிகுந்த உற்சாகத்துடன் அவனிடம் இருந்து விடைபெற்றாள். அவனும் ஜவுளி வாங்குவது தொடர்பாக கிளம்பி கொண்டு இருந்தவன் இவளோடு பேசியதால் தாமதமானதை உணர்ந்து கார் டிரைவரை கொஞ்சம் வேகமாக என்னை ஏர்போர்ட்டில் கொண்டு விடணும், காரை தயார் பண்ணு என்று கூறியவாறு கிளம்பினான்.
அன்று பகலில் நிகழ்ந்தவைகளை எண்ணியவாறே படுக்கையில் புரண்டவளுக்கு இன்று மகிழ்ச்சியால் தூக்கம் வரவில்லை.  அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்காதவாறு அப்பா அம்மாவிடம் பேசுவது காதில் விழுந்தது. நேற்று வரன் பற்றிய தகவல் வந்தது.  அந்த பையன் வேலை பார்க்கும் இடத்திற்கு நேரில் சென்று விசாரித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார். அதிகாலையில் எழுந்து குளித்துமுடித்து தரகர் தந்த அட்ரஸை பத்திரபடுத்திக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி கிளம்பினார். என்னங்க, பையன பற்றி நல்லா விசாரிச்சீங்களா, நம் பொண்ணுக்கு ஏற்ற வரனா இருக்குமா என்று கணவனை ஏறிட்டாள் திருமதி கிருஷ்ணமூர்த்தி. தரகர் சொன்னத பார்த்தால் நம் குடும்பத்திற்கு ஏற்ற பையனா தான்டி தெரியுது. எதுக்கும் அந்த பையன் வேலை பார்க்கும் இடத்தில் நேரில் சென்று ஒரு எட்டு பார்த்திட்டு வந்திடலாம்னு கிளம்பிட்டு இருக்கேன்டீ.. நல்லதுங்க, போற வழியில் நம்ம கோவிலில் சென்று ஒரு அர்ச்சனையை பண்ணிட்டு போங்க என்று கணவனை வழியனுப்பி வைத்தாள். தரகர் தந்த விலாசத்தை தேடி கண்டு பிடித்து நகருக்கு வெளியில் புதிதாக எழும்பியிருக்கும் கட்டிடத்தின் முன் வந்து நின்று இதில் தரகர் சொன்ன பையன எப்படி கண்டு பிடிக்கிறது என்று கொஞ்சம் குழம்பி நின்றார். அவரது குழப்பத்தை கவனித்தபடியே அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மணிகண்டன், எக்ஸ்கியுஸ்மி சார் யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் யாரை தேடி இங்கே வந்திருக்கீங்க என கேள்விகளை அடுக்கியவாறே அவரது பதிலை எதிர்பார்த்து நின்றான். என் பெயர் கிருஷ்ணமூர்த்தி, தரகர் வரதராஜன் இந்த அட்ரஸை தந்து அனுப்பி வச்சாரு.. இங்கே சூப்பர்வைசரா இருக்கும் மணிகண்டன் என்ற பையன என் பொண்ணுக்கு பார்த்திருந்தோம். அதான் நேரில் பார்த்திட்டு போகலாம்னு வந்தேன் சார். ஆனால் இந்த கட்டிடத்தில் யாரிடம் போய் விசாரிக்கிறதுனு தெரியாம குழம்பி நிற்கிறேன் சார் என்றார் கிருஷ்ணமூர்த்தி. .